Monday, January 16, 2012

காயல்பட்டணம் ஜாவியா தோன்றிய வரலாறு முதல் பகுதி தொடர்ச்சி....

இவர்கள்காலம் வரை காயல்பட்டினம் முஸ்லிம்கள் சுன்னத் வல் ஜமாஅத் ஷாபிஈ மத்ஹபு, காதிரிய்யா தரீகாவையே பின்பற்றி வந்தனர். அதன்படியே அமல்கள் செய்து வந்தனர். தைக்கா சாகிபு வலியுல்லா ஒரு சிலருக்கு கிலாபத் கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹஜ்ரத் ஷெய்கு சுல்தான் அப்துல் காதிர் என்ற சுல்தான் அப்பா அவர்கள். இவர்கள் தைக்கா சாகிபு அப்பா அவர்களுக்கு நெருங்கிய உறவினா கூட. இவர்கள் வெகுளியானவர்கள். விலாயத்தைப் பெற்ற மகான். இவர்களின் அடக்கஸ்தலம் இலங்கை கண்டி  மாத்தளை டவுண் பள்ளியில் இருக்கிறது.

தைக்கா சாகிபு அப்பா அவர்களின் பணியை அன்னாரின் காலத்திற்குப் பின் அவர்களின் கலீபாக்கள் செய்து வந்தனர். இக்காலகட்டத்தில்தான் காயல் நகரில் முஹம்மது அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு லெப்பை ஆலிம் என்ற பெரிய ஷெய்குனா வாழ்ந்தார்கள்.

இந்தப் பெரிய ஷெய்குனா அவர்கள் தமக்கு ஆன்மீக குரு வேண்டி தைக்கா சாகிபு அப்பாவிடம் பைஅத்து பெற ஊர் வருகிறார்கள். அச்சமயம் தைக்கா சாகிபு அப்பா அவர்கள் மறைந்து விட்ட காலமாக இருந்தது. செய்வதறியாது திகைத்த பெரிய ஷெய்குனா அவர்கள், மிகவும் கைச்சேதப் பட்டு அன்னாரின் கப்ரு ஷரீப் வந்து ஜியாரத் செய்து அன்னாரிடமே தமக்கு உரிய குருவை காட்டித் தரும்படி வேண்டி நின்றார்கள்.

அன்றிரவு பெரிய ஷெய்குனா என்பவர்கள் கனவு ஒன்று காண்கிறார்கள்,  தைக்கா சாகிபு அப்பா வலி அவர்களும் அன்னாரது கலீபா சுல்தான் அப்பா அவர்களும்(மேற்குப் பக்கமாக) எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். உரிய ஷெய்கை வேண்டி நின்ற பெரிய ஷெய்குனாவிற்கு தைக்கா சாகிபு அப்பா அவர்கள் தமது கையை தமது கலீபாவின் பக்கம் நீட்டி இஷாறாவாக சுல்தான் அப்பா அவர்களிடம் பைஅத்துப் பெற சைகை செய்தார்கள்.

கனவு கண்டு விழித்து எழுந்த பெரிய ஷெய்குனா அவர்கள் காலையில் நேராக சுல்தான் அப்பா அவர்களிடம் சென்று பைஅத்து வாங்கி வந்து தம்மை காதிரிய்யா தரீகில் இணைத்துக்கொண்டனர் என்றும், இதை தமது உறவினர்கள், நண்பர்களிடம் சொல்லியதும் அவர்கள் பெரிய ஷெய்குனாவை நோக்கி நீங்களோ பெரிய ஆலிம், காரீ,  விசயம் தெரிந்தவர்கள். சுல்தான் அப்பாவோ ஒன்றும் தெரியாத வெகுளி. அவர்களிடம் நீங்கள் பைஅத்து வாங்கலாமா? நீங்களோ பைஅத்து கொடுக்கத் தகுதியுடையவர்கள்,  தைக்கா சாகிபு அப்பா அவர்கள் கையை காட்டியது மேற்குப் பக்கம் கிப்லா இருக்கும் மக்காவை நோக்கித்தான். அங்குதான் உங்கள் ஷெய்கு இருக்கிறார் என்று பலவாறு சொல்லி இந்த பைஅத்தை முறித்து போடச் சொன்னார்கள். இவ்வாறு ஒரு கருத்தும்,

மற்றொரு கருத்து, பைஅத்து வாங்கும் முன்னரே அவர்களை மேற்கூறியவாறு பேசி திசைதிருப்பி அழைத்து வந்தனர் என்று கூறிய கருத்தும் சொல்லப்படுகிறது.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே! உறவினர்கள், நண்பர்கள் பேசிய பேச்சுக்கள் பெரிய ஷெய்கு என்பவரின் மனதை மாற்றியது. தாம் எடுத்து வந்த பைஅத்தை பொருட்டாக எண்ணாமல் அதை முறித்துப்போட்டார்கள். தாம் அறிவாளி, விசயம் தெரிந்தவர் என்ற எண்ணம் மேலோங்கியது. குத்புஸ்ஸமான் தைக்கா சாகிபு வலி மற்றும் அவர்களின் கலீபாவின் மகிமையை மறந்தனர். அவர்களை ஏளனமாக எண்ணத் துவங்கினர். மனதில் அவர்கள் மேல் ஒரு கரும்புள்ளி இவர்களுக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு மக்கா சென்றிருந்த சமயம், பாஸி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்தித்ததாகவும் அவர்களிடம் கிலாபத்து பெற்றதாகவும் சொல்லிக் கொண்டு காயல்பட்டணம் வந்து சேர்ந்தனர்.

இதுவரை காயல்பட்டணம் கண்டிராத புதிய தரீகாவை ஹிஜ்ரி 1282 (கி.பி.1865)ல் காயல்பட்டினத்திற்கு கொண்டு வந்து, அதுவரை ஒற்றுமையாக ஒரே கோட்பாட்டை பின்பற்றி வந்த காயல்நகர முஸ்லிம்களிடையே இறைநேசர்களான தைக்கா சாகிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சொல்லை மதியாது, அன்னாரின் மருமகனார் இறைநேசர் சுல்தான் அப்பா அவர்களிடம் கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரிவினையை உண்டு பண்ணி, குழப்பம் தோன்ற காரணமானவர்கள் ஷெய்குனா என்றழைக்கப்படும் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு லெப்பை ஆலிம் அவர்களே. இந்த குழப்பம் காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியிலிருந்து பெரிய ஷெய்குனா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதை அவர்களின் ஜாவியா நூற்றாண்டு மலர் (ஈஸவி 1974) பக்கம் 86 ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அதில்,'.....திக்ரு செய்யவும், முரீது கொடுக்கவும் ஆரம்பித்து ஊரில் ஓரளவு பிரபலமடைந்தார்கள். இப்புதுவித தரீகும், திக்ரும் ஊரில் பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கியது....' என்று கூறுவது மூலம் தாங்கள் கொண்டு வந்த தரீகா புதியது என்றும் ஏற்கனவே காயல்பட்டணத்தில் ஒரு தரீகா இருக்கிறது என்றும் தங்கள் கூற்று மூலமாகவே ஒப்புக் கொண்டுள்ளார்கள். மேலே சொன்னபடி, 'ஓரளவு பிரபலமடைந்தார்கள்' என்ற வாசகம் தான் பிரபலமடையவும், தம்மை பலரும் உற்று நோக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவுமே இந்த புதிய தரீகாவை உண்டு பண்ணி காயல்நகருக்கு கொண்டு வந்தார்கள் என்று தெரியவருகிறது.

இவர்களின் குழப்பம் தலைதூக்கத் துவங்கியதும், தங்களுக்கென்று தனி இடம் தேடி அலைந்தார்கள். காதிரிய்யா தரீகின் ஷெய்குமார்கள் அடங்கியிருக்கும் காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் பெரிய ஷெய்குனா அவர்கள் தொழுது வந்ததால் அப்பள்ளி காம்பவுண்டிற்குள் தமது புதிய தரீகாவிற்கு கட்டிடம் கட்ட முயன்றார்கள்.

ஏற்கனவே அப்பள்ளி காதிரிய்யா தரீகா நடைமுறையைப் பின்பற்றி அமல்கள், திக்ருகள் நடைபெற்று வந்ததால், அப்பள்ளி ஜமாஅத்தினர்கள் காதிரிய்யா தரீகை பின்பற்றி வந்ததால் இவரின் இம்முயற்சி கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நன்கு மார்க்க அறிவு பெற்றவர் என்றும், தன்னை ஷெய்கு ஆக பிரகடனப்படுத்தி முரீது கொடுக்க ஆரதம்பித்தவரும் ஒரு ஜமாஅத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ஆச்சரியப்பட்டு, மனம் சஞ்சலமடைந்து பெரிய ஷெய்குனா அவர்கள் முயற்சி;க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை காயல்பட்டணம் ஜாவியா நூற்றாண்டு மலர் (வெளியீடு: ஜாவியத்து பாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா வருடம் 1974) பக்கம் 67 ல்,

'வந்தவர்களில் ஒரு பெரியார், ஷெய்குனா அவர்களே! நீங்கள் கட்டிடம் கட்டப் போகிறீர்களாமே, எதற்கு?
ஷெய்குனா: அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக.
பெரியார்: யார் திக்ரு செய்வதற்காக?
ஷெய்குனா: நாம் எல்லோருமே திக்ரு செய்வதற்காக.
பெரியார்: யாருடைய செலவில் கட்டுவது?
ஷெய்குனா: நாங்கள் செலவு செய்து கட்டுவோம்.
பெரியார்: அப்படியானால் அதில் முதலில் திக்ரு செய்வது யார்?
ஷெய்குனா: முதலில் நீங்கள் திக்ரு செய்யுங்கள். பிறகு நாங்கள் திக்ரு செய்கிறோம்.
பெரியார்: அதனுடைய சாவி முதலியன எவரிடம் இருக்கும்?
ஷெய்குனா: உங்களிடமே இருக்கும். அவைகளை நீங்களே வைத்திருங்கள்.

நடுநலையாளர்களே! நன்கு மேற்கண்ட உரையாடல்களை பாருங்கள்! சிந்தியுங்கள்! உங்களுக்குத் தோன்றுவது என்ன?

உண்மை நிலவரங்களை அறிய நீங்கள் சிந்திக்க... இதன் அடுத்த பகுதியை தொடர்ந்து பார்ப்போம்.....