Friday, March 18, 2011

காயல்பட்டணம் சரித்திரம்

அப்பாஸிய பரம்பரையை சேர்ந்த ஹாரூன் அல்வாதிக் பில்லாஹ் என்ற அரசன் அரேபியாவை  ஆட்சி  செய்து  வரும்  வேளையில், தனது  நாட்டு  மக்களான குறைஷிகள், அஹ்லுபைத்துகள்  மற்றும் இமாம்கள்  ஆகியோர்களை தனது தவறான கொள்கையான புனித  குர்ஆன் படைக்கப்பட்டது  என்பதை நம்புமாறு மிகவும் வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்தான். ஆனால் அந்த நல்லோர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். 

ஹிஜ்ரி 227, 842 கிபி, எகிப்து  நாட்டிலுள்ள  முகத்தம்  மலையடிவாரம் அருகிலுள்ள கரஃபதுல் குப்ரா எனும் ஊரிலுள்ள மக்கள் ஒன்று கூடி தங்கள் சொந்த நாட்டை விட்டும் வெளியேறுவது என்று தீர்மானித்து, தத்தமது குடும்பத்தினர்களோடு 5 கப்பல்களில் கடல் மார்க்கமாக புறப்பட்டனர். ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வழித்தோன்றல் செய்யது முஹம்மது கல்ஜி அவர்கள் தலைமையில் வந்த ஒரு கப்பல் இந்தியாவின்  தென்  பகுதி  தூத்துக்குடிக்கு  அடுத்துள்ள  காயல் என்னும் ஊருக்கு வந்து அடைந்தது. அப்பொழுது ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் வந்த விருந்தினர்களை அன்போடு வரவேற்று, வசிக்க, வியாபாரம் புரிய இடமும் வழங்கினான். அந்த இடம் காயலில் இருந்து உதய மார்த்தாண்டன் நகர் (காட்டு மக்தூம் பள்ளி) வரை இருந்தது. அந்த இடத்திற்கு காஹிர்ஃபதன் என்று  பெயர்  சூட்டப்பட்டது. பின்பு  பேச்சு  வழக்கில்  தற்போதுள்ள 'காயல்பட்டணம்'   என்று மாறி விட்டது. 
 
1284 கிபி, எகிப்து நாட்டிலிருந்து ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின்  பரிசுத்த வமிசத்தை  சேர்ந்த  ஸுல்தான்  செய்யித் ஜமாலுத்தீன்  அவர்களின்  தலைமையில்  மக்கள்  வந்து காயல்பட்டணத்தில் குடியேறினார்கள். 1293 கிபி, மன்னன் சுந்தர பாண்டியன் மறைவுக்கு பிறகு ஸுல்தான் செய்யித் ஜமாலுத்தீன் அவர்கள் பாண்டிய அரசாங்கத்தை மிகச் சிறப்புடன் சில காலம் ஆட்சி செய்தார்கள்.  
 
தமிழில் காயல் என்பதற்கு கடலும் அதைச் சார்ந்த இடம் என்றும், பட்டணம் என்பதற்கு நகரம் என பொருள்படும். ஆகையால் காயல்பட்டணம் என்பதற்கு கடல் அருகே அமைந்துள்ள நகரம் என விளங்கப்படும். காயல் மிகவும் புராதன இடம். ஐயாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு  இரண்டாவது  தமிழ்  சங்கத்தின் தலைநகராக இது விளங்கியது. அப்பொழுது கபாடபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின்  முதல்  பிரதம  மந்திரி பண்டிட்  ஜவஹர்லால்  நேரு  அவர்கள் தங்களுடைய  டிஸ்கவரி  ஆப்  இந்தியா  எனும்  புத்தகத்தில் 'மதுரை  பாண்டிய அரசாங்கத்தின்  தலைநகரமாகவும்,  காயல்  அதனுடைய  துறைமுகமாகவும் இருந்தது என குறிப்பிடுகிறார்.

இவ்வூரில் முதன்முதலாக அமைக்கப்பட்ட தெருக்கள் நான்கு: நயினார் தெருஇ சதுக்கைத் தெரு(பைக்காரத் தெரு), மஹ்தூம் தெரு, மரைக்காயர் தெரு ஆகியவை. பின்னர் ஊர் விரிவாக்கத்தின் போது பல தெருக்கள் உருவாகின. ஊரை அழகாக வடிவமைத்துள்ளனர். பெண்களுக்கென்று தனிப் பாதைகள் (முடுக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் கூடுமிடத்திற்கு வெட்டை என்பார்கள். எகிப்து நாட்டின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே இந்நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இன்றும் எகிப்துக்குச் சென்றால் இதே அமைப்பை பார்க்கலாம்.
 
காயல்பட்டணம் தனது பழமை வாய்ந்த கலாச்சாரம் மட்டுமின்றி, இஸ்லாமிய மறைஞானம், அகமிய ஞானம் இவைகளுக்கும் பிரசித்தி பெற்றது. ஆனதால் 'சிறு மக்கா' என்று அழைக்கப்பட்டது. எண்ணிலடங்கா குதுபுமார்களும், அவ்லியாக்களும் இவ்வூரில் பிறந்தும் வாழ்ந்தும் வருகிறார்கள். இவர்களுள் மிகவும்  பெயர்  பெற்று  விளங்கிய  இறைநேச செல்வர்களில்  சிலர்  வருமாறு, பெரிய ஷம்ஸுத்தீன் வலியுல்லாஹ், ஷெய்கு ஸலாஹுத்தீன் வலியுல்லாஹ், ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் மற்றும் இவர்களின் ஐந்து இரத்தினங்களான மக்கள் (சின்ன ஷம்ஸுத்தீன் வலியுல்லாஹ், செய்யித் அஹ்மத் வலியுல்லாஹ், ஸதக்கதுல்லாஹ்  அப்பா  வலியுல்லாஹ், ஷாம் ஷிஹாபுத்தீன்  வலியுல்லாஹ், செய்யித்  ஸலாஹுத்தீன்  வலியுல்லாஹ்), ஹாஃபிழ்   அமீர்  வலியுல்லாஹ், காழி  அலாவுதீன் வலியுல்லாஹ்,  லெப்பை அப்பா சகோதரர்கள் வலியுல்லாஹ், உமர் வலியுல்லாஹ், தைக்கா சாஹிப் வலியுல்லாஹ், பேர் மஹ்மூது மஜ்தூப் வலியுல்லாஹ், வரகவி காசிம் புலவர் நாயகம் வலியுல்லாஹ், முத்துவாப்பா சகோதரர்கள் வலியுல்லாஹ், ஈக்கி அப்பா வலியுல்லாஹ். இவ்வூர் மக்கள் ஷாஃபி, மத்ஹபை பின்பற்றுகின்றனர்.

    ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் திருமணத்திற்குப் பின் பெண்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.

    சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஹஜ்ரத் நாகூர் சாகுல் ஹமீது பாதுஷh நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வூர் வந்திருந்த சமயம் இம்மக்கள் மிகவும் கண்ணியப் படுத்தியதால், உவகை கொண்ட அவர்கள் இவ்வூரில் இறை நேசர்களும், குத்புமார்களும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்று துஆ செய்தார்கள். மேலும்  நாகூர் நாயகம் வந்த பிறகு காதிரிய்யா தரீகா புத்துணர்ச்சி பெற்று வளர்ந்தோங்கத் தொடங்கியது. இவர்களிடம் பைஅத்துப் பெற்றவர்களில் மிக முக்கியமானவர்கள் ஐந்து ரத்தினங்களை பெற்றெடுத்த ஹஜ்ரத் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை சதக்கத்தி நெய்னார் அவர்களாவார்கள். இவர்களுக்குப் பின் இவர்களது மகனார் சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களது உத்திரவிற்கு இணங்க, காயல்பட்டணம் ஜும்ஆ பெரிய பள்ளியில் வைத்து ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகைரலியல்லாஹு அன்ஹு அவர்களது பேரர் ஹஜ்ரத் ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பைஅத்தும்இ கிலாபத்தும் கொடுத்துச் சென்றார்கள்.     ஹஜ்ரத் நாகூர் சாகுல் ஹமீது பாதுஷh நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் துஆவிற்கு ஏற்ப காயல் நகரில் இறைநேசர்களும், குத்புமார்களும் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். ஹஜ்ரத் சுலைமான் வலி அவர்களின் வமிசவழியில் வந்துதித்த ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்கள் மகனார் ஹஜ்ரத் தைக்கா சாகிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் அப்துல்லாஹில் காதிரியுல் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் ழியாவுல் ஹக் ஸூபி ஹுஸைன் ஹைதராபாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஹஜ்ரத் nஷய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் காதிரிய்யா தரீகாவை நமதூரில் வளர்த்த மகான்களாவார்கள்.
   
  இதற்கிடையில் ஹஜ்ரத் தைக்கா சாகிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திற்குப் பின் மிஸ்கீன் சாஹிபு ஆலிம் காஹிரி அவர்களால் நகரில் 'ஷhதுலிய்யா தரீகா' தோன்றியது.
 
 காயல்பட்டணத்தில் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. முக்கியமானவைகளில் சில, பெரிய ஜும்மா பள்ளி, சிறிய ஜும்மா பள்ளி, மீக்காயில் பள்ளி, மொகுதூம் பள்ளி, அஹ்மத் நெய்னார்  பள்ளி,  காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி,  முஹிய்யத்தீன் பள்ளிஇபுதுப்பள்ளி, மேலப்பள்ளி, மரைக்கார் பள்ளி, குருவித்துறை பள்ளி ஆகியன. மெஞ்ஞான தவசாலைகளான மஹ்லரத்துல் காதிரிய்யா சபை, அல்ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிர்ரஸூல் அஸ்ஷாஹ் ஷெய்க் அப்துல் காதர் ஆலிம் ஸூஃபி சித்திகி காதிரி காஹிரி  ரழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களால்  தோற்றுவிக்கப்பட்ட  காதிரிய்யா  தரீகாவின் தியான  பீடம் 'ஹிஸ்புல்லாஹ் சபை - ஸூஃபி மன்ஜில்', அஷ்ஷெய்க் அல்ஹாஜ் ஜலீல்  முஹிய்யத்தீன் காதிரி காஹிரி அவர்களால் உருவாக்கப்பட்ட 'அஸ்செய்யித் அப்துஸ்ஷக்கூர் தர்பா அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு குத்பியா மன்ஜில்' ஆகியனவாகும்.
  
தமிழ் இங்குள்ள மக்களின் பேச்சு மொழியாகும். ஒரு காலத்தில் தமிழை அரபு லிபியில் எழுதுவதில் இங்குள்ளவர்கள்  தேர்ச்சி  பெற்று  விளங்கினர். அதை அரபுத்  தமிழ்  என்று  அழைத்தனர்.  முதன்  முதலில்  அரபுத்  தமிழில் எழுதியவர்கள் ஹஜ்ரத் ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களே ஆவார்கள். அல்லாமா ஹபீப் முஹம்மத் லெப்பை ஆலிம், அல்லாமா நூஹ் இப்னு அப்துல் காதர் சாஹிப் ஆகியோர்கள் அல்குர்ஆன் மொழியாக்கம் – விளக்கவுரை, அரபுத் தமிழில் முறையே 'புதூகாதுர் ரஹ்மானியா', 'பத்ஹுல் கரீம்' எனும் பெயரில் எழுதியுள்ளார்கள். காயல்பட்டணத்தின் மாபெரும் மேதைகளான 'புலவர் நாயகம்' எனும் பெயர் பெற்று விளங்கிய ஷெய்குனாப் புலவர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு , 'திருப்புகழ்' எழுதிய வரகவி காசிம் புலவர் நாயகம் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு, 'வேத புராணம்' பாடிய நூஹூ வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு, 'ஞான ஒப்பாரி' இயற்றிய ஹஜ்ரத் உமர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு, 'பெரிய ஹதீது மாணிக்க மாலை, சின்ன ஹதீது மாணிக்க மாலை' இயற்றிய ஹஜ்ரத் ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய இவர்கள் தமிழ்  மொழி  இலக்கியத்தில்  பாண்டித்தியம்  பெற்று விளங்கியதோடு, தங்களுடைய கவிகள், கஸீதா இவைகளின் மூலம் தமிழ் மொழி வளரவும், தமிழ் கூறும்  நல்லுலகம்  இஸ்லாமிய  ஷரியத்  சட்டங்களையும் இபிக்ஹூ நுணுக்கங்களையும், தரீகத் வழிமுறைகளையும், ஹகீகத் மற்றும் மக்ரீஃபத் எனும்  அகமியங்களை  தெளிவாக  அறிந்து கொள்ளவும்  மிகவும்  பேருதவி புரிந்தார்கள்.   
  
    ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் திருமணத்திற்குப் பின் பெண்கள் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் ஏற்பட்டது.
   
      1955ம் வருடம் ஊரில் ஒரே ஜும்ஆவாக இருந்தது இரண்டு ஜும்ஆவாக பிரிந்து போனது. அதன்பின் அல்-ஜாமிவுல் அஸ்ஹர் எனும் புதிய ஜும்ஆ பள்ளி உருவாகியது. இரண்டு ஜும்ஆ உருவாக காரணமாக அமைந்தது ஊரில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட போட்டிகளும், சண்டை சச்சரவுகளுமே காரணமாகும்.

இதற்கு முக்கிய காரணகர்த்தாவாக அமைந்தவர்கள் காயல்பட்டணம் ஜாவியா மத்ராஸாவைச் சார்ந்தவர்களே! இவர்கள் காதிரிய்யா தரீகா மற்றும் முஹிய்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது கொண்ட குரோதமும், பகைமையும் காரணமாக வைத்து காதிரிய்யா தரீகாவை பின்பற்றுபவர்களை தந்திரமாக பிரித்து யூதர்கள் செய்யும் நாசகாரச் செயல்களை செய்தார்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் செயல்பட்டு வந்த காயல் மாநகரில் வஹ்ஹாபிஸத்தை வேரூன்ற செய்தவர்கள் இந்த ஜாவியாக்காரர்களே என்றால் அது மிகையல்ல.அச்சமயங்களில் நமது சுன்னத்வல் ஜமாஅத் ஆலிம்கள் தகுந்த பதிலடிகளைக் கொடுத்துகள்ளனர். அவர்கள் வெளியிட்ட ஒடுக்கு பத்வாவிற்கு பதிலாக வெளியிடப்பட்ட பத்வாவினை பார்க்க:http://sufimanzil.org/fatwa/fikhfatwas/odukku-fatwa
  
    காயல்பட்டணத்தில் மூன்றாவது அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 1978 ஜனவரி மாதம் 1314,15 ஆகிய தினங்களில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் வைத்து நடைபெற்றது. இதில் 11 நூல்கள் வெளியிடப்பட்டன. கருத்தரங்கம், கவியரங்கம் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.

2 comments:

  1. Sufi Manzil Given Thabligh, Deoband and Jawiya information is clearly Wrong.Allah will Guide him.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் வெளியிட்டு இருக்கும் தப்லீக் சம்பந்தமான விசயங்கள் மற்றும் ஜாவியா சம்பந்தமான விசயங்கள் அனைத்திற்கும் ஆதாரங்களோடு வெளியிட்டுளோம். அவை அனைத்தும் மிகச் சரியானவை. அல்லாஹ் உங்களை வழிகேட்டின் மொத்த அடையாளமான காயல்பட்டினம் ஜாவியா கொள்கையிலிருந்து பாதுகாப்பானாக.

      Delete